Showing posts with label விவசாயம்.. Show all posts
Showing posts with label விவசாயம்.. Show all posts

Friday, August 7, 2009

கோலியஸ்.


முன்னுறை -: கோலியஸ் என்பது ஒரு மருந்துப் பயிர். இதை மருந்துக்கூர்கன் என்று தமிழில் சொல்வர். கோலியஸ் ஓமவள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைச் செடி. இது நெருக்கமான இலைகளில் தடிமனான இலைகளுடன் சுமார் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இச்செடியானது நுனிக்கொழுந்தைக் கிள்ளி நட்டு வளர்க்கப்படுவதால் ஆணிவேர் உண்டாவதில்லை. அடிக்கணுவிலிருந்து பக்க வேர்களே உண்டாகின்றன. பழுப்பு நிற வேர்களிலிருந்து ஒல்லியான கேரட் வடிவத்தில் 1 அடி நீளம் வரை கிழங்குகள் உருவாகின்றன. ஒரு செடியிலிருந்து அரைக் கிலோ முதல் ஒரு கிலோ வரை பச்சைக் கிழங்குகள் கிடைக்கின்றன. இதன் மருத்துவ குணம் -இரத்த அழுத்தத்தை சீர் செய்து இதயப் பழுவைக் குறைக்கின்றன. இது ஆஸ்த்மா, புற்று நோய், கிளாக்கோமா நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் முக்கிய மூலப்பொருளாகச் செயல்படுகிறது. தற்போது ஒரு கிலோ பச்சைக் கிழங்கின் விலை ரூ.10-00 க்கு மேல் விற்கப்படுகிறது. இதன் சாகுமடி குறித்துக் கீழே காண்போம்.

மண்வளம் -: கோலியஸ் கிழங்குச் செடிவளர பொலபொலப் பான மண் அவசியம். பொலபொலப்பான செம்மண், வண்டல்மண், வண்டல் சேர்ந்த குறுமண், சத்து நிறைந்த சரளமண் ஏற்றவை. தண்ணீர் தேங்கும் கரிசல் பூமி, களி நிலங்கள் வேண்டாம். களர் மண்ணும் கூடாது. கோலியஸ் வேர்கள் மெல்லியானவை தண்ணீர் தேங்கினால் தாங்காது. ஆகவே வடிகால் வசதியுள்ள நிலமாக வேண்டும். நீர் வடியாத இடத்திலோ நீரைப்பிடித்துக் கொள்ளும் சொதசொதப்பான மண்ணிலோ நட்டால் இளம் வேர்கள் மூச்சிவிட முடியாமல் அழுகிப்போகும். செடி வாடிப்போகும்.

கோலியஸ் கடல் மட்டத்திற்கு 3000 அடி வரை உள்ள இடங்களில் வளர்கிறது. சூரிய வெளிச்சம் நன்கு படக்கூடிய காற்றுள்ள மலைச் சரிவுகளிலும் நடலாம். மான வாரியாகப் பயிரிட்டால் பயிர்காலமான ஆறு மாத்ததிற்குள் சுமார் 100-120 செ.மீ. மழை தேவை. அதனைப் பிடித்துவைத் திருக்கக் கூடிய மண்ணும் தேவை. நிழல்கள் உள்ள இடத்தில் இதை நடக்கூடாது.

மண்ணின் கார அமில நிலை பிச் 8.00 - 7.00 க்குள் உள்ள இடங்களிங் இதன் மகசூல் திறன் அதிகமாகக்

காணப்படுகிறது. அதாவது கிழங்குகள் நன்கு பருக்கின்றன. கிழங்ககளின் எடையும் அதிகமாக இருக்கிறது. கத்திரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறிப் பயிர்களிலும் வாழையிலும் நூற்புழுக்களின் தாக்குதல் அதிகம். ஆகவே அப்பயிர்களிக்குப் பின்பு உடநடியாக கோலியஸ் பயிரிட வேண்டாம். நிலத்தை உழுது நன்கு காயவிட்டு, நிறைய எரு அடித்து கலந்து விட்டு, நூற்புழுத் தடுக்கும் பயிர்களைப் பயிரிட்டு, அதற்கடுத்து கோலியஸ் பயிரிடுவதே பாதுகாப்பானது. சோளத்திற்குப் பின்பு கோலியஸ் பயிரிட்டாலும் மஞ்சள் பயிரிட்டாலும், கிழங்கு மகசூல் அதிகரிக்கிறது என்பது உண்மை.

நிலத்தை உழுது எரு இட்டுப் பண்படுத்தல் :- நிலத்தை புழுதிபட உழவு செய்யவும். நடவுக்கு ஒரு மாத காலத்திற்கு மூன்பாகவே ஏக்கருக்கு 7 டன் தொழு எருவைச் சிதறி விட்டு உழவு செய்யவும். ஈரமான மண்ணில் நுண்ணுயிர்கள் எருவைச் சாப்பிட்டுப் பெருகும். அந்நிலத்தில் பயிர்கள் நட்டவுடன் துளிர்க்கும். துரிதமாய் வளரும். களை விதைகள் முழைத்திருந்தால் அதனையும் உழுது காய விட்டு பார் போட்டால் அப்புறம் அதிக களை முளைக்காது. அக்களைச் செடிகளும் மண்ணோடு மக்கி நுண்ணூட்டங்களை பயிருக்குக் கொடுக்கும்.

பாத்திகள் அமைத்தல் -: கோலியஸ் மண்ணுக்குக் கீழ்தான் கிழங்குகள் உண்டாகின்றன. மண் இருகாமல் இருக்க 15 அடிக்கு 30 அடி நீளவாக்கில் 2 அடி இடைவெளியில் கலப்பையிலோ, டிராக்டரினாலோ மண்வெட்டியாலே பார்கள் அமைக்க வேண்டும்.

நடவு இடைவெளி -: வளமான எருவிடாத நிலங்களுக்கு பாருக்குப்பார் 2 அடி X செடிக்குச்செடி 1.5 அடி. அவ்வாறு ஏக்கருக்கு 14500 கன்றுகள் தேவைப்படும்.

வளம் குறைந்த எருவிட்ட நிலங்களிக்கு பார் 2 அடி X செடிக்கு செடி 1.25 அவ்வாறு ஒரு ஏக்கருக்கு 17000 கன்றுகள் தேவைப்படும்.

வளம் குறைந்த சரளை மண்ணுக்கு பாருக்குப் பார் 1.75 X செடிக்குச்செடி 1.25 அடி ஆக ஒரு ஏக்கருக்கு 20,000 கன்றுகள் தேவைப்படும்.

நடவுக்கு ஏற்ற கொழுந்து -: முற்றிய பின் கொழுந்து இளம் பச்சை நிறத்திலிருந்து கரும் பச்சை நிறத்திற்கு மாறி தண்டு பகுதி கெட்டியாயிருக்கும். அதன் நுனிக் கொழுந்தை சுமார் 10 செ.மீ.நீளம் விட்டு 3 - 4 கணுக்கள் இருக்கும். அந்தக் கணுவில் ஜோடி இலைகள் இருக்கும். அதை வெட்டி எடுக்கும் போது புது பிளேடால் வெட்டி சேகரிக்க வேண்டும்.

நீர் பாச்சல் -: பாத்திப் பார்களில் தண்ணீர் விட்டு கொழுந்துகளை தகுந்த இடைவெளியில் நட வேண்டும். பின் 3 ம் நாள் உயிர் தண்ணீர் பாச்ச வேண்டும். 40 நாட்களி வரை வாரம் ஒரு தடவை பாசனம், 40 நாட்களிக்குப்பின் 10 நாட்களுக்கு ஒரு தடவை, அறுவடைக்கு 10 நாள இருக்கும் போதே பாசனத்தை நிறுத்த வேண்டும். செடி வாடும் போது நீர் பாச்ச வேண்டும்.

களையெடுத்தல் -: கோலியஸ் நடவு நட்ட 15 - 20 நாடகளில் முதல் களையை வேர்களுக்குப் படாமல் சுரண்டி எடுக்கவேண்டும். தாமதித்தால் கிளை வேர்கள் படர்ந்து வெட்டுப் பட நேரிடும். இரண்டாவது களை கைக்களை சிறந்தது. கதிர் அரிவாளால் தரைமட்டத்தில் அறுத்து எடுப்பது நன்று. 40 நாட்களுக்குள் இரண்டாம் களை எடுத்து மண் அணைத்து விட வேண்டும். தாமதித்தால் வேர்கள் படர்ந்து விடும். 50 நாட்களுக்கு மேலாகி விட்டால் களை எடுக்கக் கூடாது. 60 நாடகளுக்கு மேல் அனாவசியமாக பாத்திக்குள் நடக்கக் கூடாது.

உரம் இடல் -: நட்ட 50 நாளிலும், 100 வது நாளிலும், 150 வது நாளிலும் பார் மேட்டில் இரண்டு வரிசைக்கு நடுவே உரம் இட வேண்டும். உரங்களை நீரில் கரைத்து விடும் முறை. 200 லிட்டர் டிரமில் வேப்பம் புண்ணாக்கு 10 கிலோ, கடலைப் புண்ணாக்கு 10 கிலோ மற்றும் டெஎபி 10 கிலோ, 3-4 நாட்கள் ஊரவைத்து பாசன நீறுடன் கலந்து பாச்ச வேண்டும். நுண்ணுயிர் உரம் 50 நாட்களிக்குள் இட வேண்டும்.

நோய்தாக்குதல் -: வேர்முடிச்சு நூற்புழு வேர்களில் உள்ள செல்களைத் தாக்குவதால் வேர் அழுகல் நோய் காரணிகள் புகுந்து தாக்கு கின்றன. பார்களில் செண்டு மல்லி, கொத்து மல்லி பயிரிட்டால் அதன் வேரோடு உரசிச் செல்லும் நீர் பாய்ந்தாலே நூற்புழு கட்டுப் படுத்தலாம். வேர் அழுகல் நோயிக்கு ஏக்கருக்கு 2 கிலோ டிரைக்கோ டெர்மாவிர்டியுடன் 200 கிலோ மண்புழு உரத்தையும் கலந்து தூருக்குத்தூர் வைத்து மண் அணைத்து 25-50 நாட்களில் 2 தடவையிட்டு நீர் பாச்சினால் கட்டுப்படும்.

அறுவடை -: கோலியஸ் கொழுந்து நட்டு 6 மாதம் கழித்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பே நீர்பாச்சல் நிறுத்த வேண்டும். தரைக்கு மேல் உள்ள தண்டு பகுதிகளை அறுத்து பாத்திக்கு வெளியே பொண்டு வந்து விட வேண்டும். ஆட்களை வைத்து மண் வெட்டியால் வெட்டி பொறுக்கு சேகரிக்க வேண்டும். மகசூல் ஒரு ஏக்கருக்கு 7-10 டன் கிடைக்க வாய்ப் புள்ளது. தற்போது பச்சைக் கிழங்கின் விலை ரூபாய் 10-00 க்குப் போய்கிறது. இது பயிரிட மான்யமும் உண்டு ஒப்பந்த சாகுபடியும் உண்டு.

ஒப்பந்த சாகுபடி முறையில் கோலியஸ் மூலிகைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த நிறுவனம்-

எம்.ஜி.பி.மார்கெட்டிங் சென்டர்ஸ்,

469, மகாலச்சுமி காம்ளெக்ஸ்,

அண்ணாபுரம்,

5 ரோடு, சேலம்-4.

போன்-0427-2447143.

செல்-9842717201 அலுவலகம்.

ஜி.பழனிவேல் பி.எஸ்.சி.,

செல்- 98427 44232.

மேலே உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டுகிறேன்.

--------------------------------------------------(தொடரும்)

Saturday, January 17, 2009

விவசாயிகளுக்கான (மரம்) ஒரு நாள் கருத்தரங்கு


விவசாயிகளுக்கான (மரம்) ஒரு நாள் கருத்தரங்கு.

விவசாய அன்பர்களே நான் 29-12-2008 ம் நாள் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழக வனக்கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையத்தில் (தொலை பேசி 04254-222010) ஒரு நாள் பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது அதில் கலந்து கொண்டேன். அதற்கு 11 மாவட்டத்தைச் சேர்ந்த 127 விவசயிகள் பங்கேற்றார்கள். அந்தப் பயிற்சியின் பெயர் ‘NATIONAL AGRICULAURAL INNVATION PROJECT’ (NAIP) என்பது. அதில் வனமல்லாத நிலங்களில் (தரிசு) மரங்களை வளர்த்து தமிழ் நாட்டுத் தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த முறையில் விற்றுப் பயன் அடைதல் பற்றியது. அதற்காக சேசாய் பேப்பர் மில், தமிழ்நாடு காகிதத்தொழிற்சாலை மற்றும் வாசன் தீப்பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து அதிகாரிகள் வந்து விளக்கம் அளித்தார்கள். வனக்கல்லூரிகளில் உள்ள விஞ்ஞானிகள் டாக்டர் பார்த்தீபன்,(9443505844) டாக்டர் சுரேஸ், டாக்டர் நடராஜன் மற்றும் டாக்டர் கிருஷ்ணவேணி ஆகியோர் சவுக்கு, தைலமரம் மற்றும் பெருமரம் பற்றி நாற்று உற்பத்தி முதல் மரம் வெட்டும் வரை முழுவிழக்கம் அளித்தார்கள். மிக்க பயனுடையதாக இருந்தது. தற்போது 5 மாவட்டங்களைத் தேர்வு செய்து அதில் 200 விவசாயிகளுக்கு ஒப்பந்த முறை சாகுபடியில் பயன் அளிக்க உள்ளார்கள். அந்த மூன்று மரங்களைப் பற்றி விபரங்கள் அளிக்க உள்ளேன். சவுக்குமரம், தைலமரம், மற்றும் பெருமரம் பற்றிய சாகுபடியும் நிர்வாகம் பற்றி தெறிந்து கொள்வோம்.

சவுக்குமரம்.

சவுக்கு மரத்தின் தாவரவியல் பெயர் கேசோரினா அக்குஸ்டிபோலியா இதை வணிகப்பெயராக கரிமரம் என்றும் சொல்வர். இந்த மரம் 40 மீ. உயரம் வரை வளரும். சுற்றளவு 180 செ.மீ. கொண்டதாக இருக்கும். இது கடற்கரைப்பகுதிகளில் நன்கு வளரும், வேறு இடங்களில் வரட்சியைத் தாங்கியும் வளர்க்கூடியது. இது மணல் கலந்த செம்மண், செம்மண், உப்புமண், சுண்ணாம்பு மற்றும் அமிலமண் பகுதிகளில் வளரும். இதற்கு நைட்ரஜன் ஏற்கனவே இருப்பதால் தேவைப்படாது. இதை விதை மூலம் இனப்பெருக்கம் செய்வதைவிட விதையில்லா இனப்பெருக்கம் என்ற கன்ற வழி பெருக்கம் (Clonal propagation) சிறந்ததாகும். நாற்றுக்கள் தயார் செய்து 4 x 4 லிருந்து 6 x 6 அடி அளவு வைத்து நடுவது நல்லது. இடைவெளி 0.80 லிருந்து 1 மீட்டர் வரை நடலாம். முறைப்படி உரம் இட்டு தண்ணீர் பாச்ச வேண்டும். மரத்தின் முக்கால் பகுதிக்கு கீழ் உள்ள பக்க க்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் 6 - 12 மாதங்களில் நல்ல கழிகள் கிடைக்க வழிவகை செய்யலாம். பயிர் பாதுகாப்புக் கையாள வேண்டும்.

சவுக்கின் அனைத்துப்பகுதிகளும் பயன்படுபவை ஒரு எக்டருக்கு 125 லிருந்து 150 டன் மூன்று ஆண்டுகளுக்கு 4 x 4 அடி இடைவெளியிலோ 5 x 5 இடைவெளியிலோ நடுவதன் மூலம் பெறலாம். இந்த வளைச்சலை சிறந்த நீர்நிர்வாகம், உர நிர்வாகம் மூலமும் மேம்படுத்தலாம்.

சவுக்கு ஓராண்டு பயிராக இருக்கும் போது வேளாண்மைப் பயிரகளில் குறிப்பாக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலாம். மணற்பாங்கான நிலங்களில் தர்ப்பூசணியும், செம்மண்ணில் எண்ணெய் வித்து பயிரான எள் கடின மண்ணில் பயிறு வகைகளையும் ஊடுபயிராகப் பயிரிடலாம். இம்மரம் மண் ஆரிப்பைப் தடுக்கும். இதன் இரசக்தி 4950 கலோரி கிலோவுக்கு.

சவுக்குமரத்தை சாகுபடி செய்தால் பதிவு செய்தல் மரம் உள்ள இடத்தில் வந்து அறுவடை செய்து டிரேன்ஸ்போர்ட் ஆகியவை நிர்வாகமே இலவசமாக ஏற்றுக்கொள்ளும் விலை டன்னுக்கு ரூ.1800-00 வீதம் எடுத்துக் கொள்வார்கள்.
---------------------------------------------------------------------------

தைலமரம்.

இது யுகலிப்டஸ் மிர்டேசியே (Myrtacea) குடும்பவகை மரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்ட அதிக விளைச்சலைத் தரும் எரிபொருள். மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளிக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிடப் பட்டது.

தைலமரம் விரைவாகவும், உயரமாகவும் (20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு வரை வளர்க்கூடியது. இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது. இம்மரத்தின் இலைகள் கடினத்தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்புடையவை. இம்மரமானது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிங் பூக்கும். தைல மரம் வண்டல், சரளை, மற்றும் சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரக் கூடியது.

இதை விதை மூலம் இனப்பெருக்கம் செய்வதைவிட விதையில்லா இனப்பெருக்கம் என்ற கன்ற வழி பெருக்கம் (Clonal propagation) சிறந்ததாகும். நாற்றுக்கள் தயார் செய்து 3 மீ x 1.5 மீ லிருந்து 3 மீ x 2 மீ அளவு இடைவெளி வைத்து நடுவது நல்லது. 4-6 ஆணைடுகளிங் அறுவடை செய்யலாம். மரம் வெட்டிய பின் மறுதாம்புகள் வளரும் 4-5 தாம்புகள்த் தவிர மற்ற அனைத்துத் தாம்புகளையும் நீக்கிவிட வேண்டும். இரண்டாவது தாம்புடன் தோண்டிவிடலாம். மேலும் விட்டால் வீரியம் இருக்காது.

பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தும் முறையில்-தண்டு துளைப்பான், இலை மிடிச்சு, கரையான், தண்டு துரு நோய், அளஞ்சிவப்பு நிறநோய் ஊதா தோய் மற்றும் பழுப்பு நோய் ஆகியவைகளைத் தடுக்க மருந்துகளைப் பயன்படுத வேண்டும்.

நான்கு முதல் ஐந்து வருடங்களில் தைல மரம் அறுவடை செய்யப்படும். நல்ல மண் வளம், நீர் வசதியுள்ள இடங்களில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் கிடைக்கும். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 4-5 ஆண்டுகள் இடைவெளியில் ரூ.75,000-00 வரை வருவாய் பெறலாம்.

தைல மரத்தை சாகுபடி செய்தால் பதிவு செய்தல் மரம் உள்ள இடத்தில் வந்து அறுவடை செய்து டிரேன்ஸ்போர்ட் ஆகியவை நிர்வாகமே இலவசமாக ஏற்றுக்கொள்ளும் விலை டன்னுக்கு ரூ.2000-00 வீதம் கொடுப்பார்கள்.

பெரு மரம்.

பீநாரி என்றழைக்கப்படும் தீக்குச்சி மரத்தின் தாவரவியல் பெயர் அய்லாந்தஸ் எக்செல்சா (Ailanthus excelsa) இந்த மரம் சைமரூபியேசி என்ற தாவரக்குடும்பத்தை சார்ந்தது. மொலுகஸ் தீவில் இதே இனத்தைச் சார்ந்த மற்றொரு மரத்திற்கு இடப்பட்ட பெயரான அய்லாந்தஸ் இம்மரத்திற்கும் சூடப்பட்டுள்ளது. இம்மரம் வறண்ட பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். நம் நாட்டில் குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப் ஒரிசா மற்றும் உத்திரப்பரதேசம் ஆகிய மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் எல்லா பகுதிகளிலும் இம்மரதை வளர்த்து பயன் பெறலாம்.

பெருமரத்தின் இலை தழைகளை கால்நடை தீவனமாகப் பயன்படுத்தலாம். இம்மரத்தின் தழையைக் கொண்டு மல்பெரி பட்டுப்புழு வளர்க்கலாம். இவற்றிக்கெல்லாம் மேலாக தீப்பெட்டி மற்றும் தீகுச்சிகள் செய்திட இம்மரம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் இம்மரம் போதியளவு இல்லாததால், தமிழ்நாட்டிலுள்ள தீப்பெட்டித் தொழிற் சாலைகளுக்குத் தேவையான அய்லாந்தஸ் மரத்தின் குச்சிகள் அண்டை மாநிலங்களான கேரளா, குஜராத், இராஜஸ்த்தான் போன்ற வட மாநிலங்களிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள தமிழ்நாட்டில் இம்மரத்தை நட்டு ஏன் மேற்படி பயனை நாம் அடையக்கூடாது இனி இம்மரத்தின் சாகுபடி விழைச்சல் விவரங்கள் பற்றி கீழே காண்போம்.

மரச்சாகுபடி குறிப்புகள்.

தமிழகத்தில் இம்மரத்தை கடற்கரை பகுதிகளிலிருந்து மெற்கு மலை தொடர்ச்சியின் அடிவாரத்திற்கு இடைப்பட்ட எல்லாப் பகுதிகளிலும் வளர்க்கலாம். மானாவரிப்பகுதிகள், செம்மண், சரளைப் பகுதிகளிலும் சுண்ணாம்பு நிலங்கள், கடற்கரை மற்றும் ஆற்றோறப்பகுதிகளிலும் இம்மரத்தை வளர்க்கலாம். காற்று அதிகமாகக்காணப்படும் பகுதியில் இம்மரங்கள் வேரோடு அல்லது மரங்கள் பாதியில் முறிந்து விழும் வாய்ப்புள்ளது. எனவே காற்று அதிகமுள்ள பகுதியில் இம்மரத்தை வளர்ப்பதைத்தவிர்க்கலாம். மானாவாரி விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் தோட்டங்களின் வேலி ஓரங்களிலும் இம்மரத்தை வளர்க்கலாம். தீப்பெட்டி தொழிலுக்குப் பயன்படுத்த இம்மரத்தை வெட்டினால் உடனே மரத்தை தீப்பட்டித் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் மேற்படி உபயோகத்திற்கு பயன் படுத்த முடியாத நிலை உருவாகலாம்.

விதை சேகரிப்பு.

மாசி, பங்குனி (பிப்ரவரி, ஏப்ரல்) மாதங்களில் நாற்றுக்களை முற்றிய நிலையில் மரத்திலிருந்தே பறித்திட வேண்டும். பின் நாற்றுக்களை நன்கு உலர்த்தி தடிகொண்டு அடித்த விதைகள் சேகரிக்க வேண்டும். ஒரு கிலோ எடையில் சுமார் 15000 விதைகள் கிடைக்கும். விதையின் மேல் தோலை நீக்கி விதையை உடனே ஊற்றும் பொழுது முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும்.

நாற்றங்கால்.

10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 15 செ.மீட்டர் உயரமுள்ள தாய்பாத்தியில் விதைகளை பரப்பி முளைக்கச்செய்ய வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 15 கிராம் அளவில் விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த 10-12 நாட்களில் விதைகள் முளைக்க துவங்கி 50 நாட்ள் வரை முளைப்பு நீடிக்கும். விதையின் முளைப்புத்திறன் சுமார் 10-20 சதவிகிதமாகும் விதைகள் முளைத்து சுமார் 2 அங்குலம் உயரம் வரை வளர்ந்த நாற்றுக்களை சரிவிகிதத்தில் மண் கலவை நிரப்பப்பட்ட பாலிதீன் பைகளில் நட வேண்டும். விதைகளை நேரடியாகவும் பாலிதீன் பைகளிலும் ஊன்றலாம். இம்மரக்கன்றுகளை வெட்டிய மரஙிகளிருந்து கணுக்களைக் கொண்டும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்.

நடவு.

சுமார் ஆறுமாதம் வளர்ந்த மரக்கன்றுகளை நிலங்களில் நடவு செய்யலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல் விவசாய நிலங்களின் வரப்பு ஓரங்களிலும், தேவைப்பட்டால் தனித்தோட்டமாகவும் சாகுபடி செய்யலாம். தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் வருடத்தின் எக்காலத்திலும் இம்மரக்கன்றுகளை நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவரி நிலங்களில் பருவ மழைகாலங்களின் ஆரம்பத்தில் நடவு செய்வது நன்று 60 செ.மீ.கன அளவுள்ள குழிகளை மானாவரிப்பகுதிகளில்
4 x 4 மீட்டர் மற்றும் 3 x 3 மீட்டர் இடைவெளியில் மரக்கன்றுகளை நடவு செய்யலாம். குழிகளில் சுமார் அரைக் கிலோ மண்புழு உரம் 25 கிராம் வேர் வளர்ச்சி பூசணம் 20 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை பாதியளவு நல்ல மண் மற்றும் தொழு உரங்களால் நிரப்பி பின் வளர்க்க விரும்பினால் 3 மீட்டர் இடைவெளியில் மூன்று மரங்கள் வீதம் ஒவ்வொரு வரிசையிலும் நட்டு வளர்க்கலாம். இம்முறையைக் கடைபிடிப்பதன் மூலம் தண்ணீர் மழைகாலங்களில் சேகரிக்கப்பட்டு மரங்கள் வளர்வதற்கு உதவுகிறது. இம்முறையின் மூலம் ஏக்கருக்கு 444 மரங்கள் வரை வளர்த்து பயன் பெறலாம்.

மகசூல்.

மரங்கள் நடவு செய்த சுமார் 6-8 ஆண்டுகளில் மரங்களை அறுவடை செய்யலாம். தரிசு நிலத்தில் வளர்க்கப்பட்ட ஒரு மரத்திலிருந்து சுமார் 250 கிலோ எடை மரமும், நீர்வளமிக்க நிலத்தில் வளர்க்கப்பட்ட மரத்திலிருந்து சுமார் 500 கிலோ எடை மரமும் சுமார்
6-8 வருடங்கள் கழித்து கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு டன் மரத்தின் சராசரி மதிப்பு சுமார் ரூபாய் 1500 லிருந்து 1600 வரை தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கலாம். குடியேத்தம் வாசன் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒப்பந்த சாகுபடிக்கும் வங்கிகள் மூலம் கடன் வசதியையும் செய்து கொடுக்கவுள்ளது.

மேலு ஒரு தகவல் -: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரைத் தாலூகாவில் ஓலைப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு 450 டன் மரம், குச்சிகள் எரிபொருளுக்காக கீழ்கண்ட கம்பனிக்குத் தேவைப்படுகின்றது. நேரடி விற்பனை, உடனே கையில் செக் கொடுத்து விடுவார்கள் என்று திரு சாமுவேல் அந்த நிறுவனத்திலிருந்து வந்திருந்தவர் கூறினார் அவரது தொலை பேசி -: 9843318401 மற்றும்
-:9445006713.
நிறுவனம்:-
“SYNERGY SHAKTHI CAPTIVE ENERGY SYSTEM”

---------------------------------(விவசாயம் தொடரும்)

Sunday, December 14, 2008

தேசிய மூங்கில் இயக்கம்.




தேசிய மூங்கில் இயக்கம்.
( National Bamboo Mission )

தமிழ் நாடு அரசு, தோட்டக்கலைத்துறை, உதவி இயக்குநர் காரமடை அவர்களால் 12-12-2008 அன்று ஒரு நாள் கருத்தரங்கு மூங்கில் சாகுபடி பற்றி மேட்டுப் பாளையத்தில் நடைபெற்றது. அதில் அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘தேசிய மூங்கில் இயக்கம்’ (National Bamboo Mission) பற்றி விளக்கியிருந்தார். அதன் விபரம் பின்வருமாறு.

இந்தியாவில் நிலவி வரும் ஒழுங்கற்ற சந்தை நிலவரத்தையும் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை (Value Added Products) தயாறிக்கும் தொழில் நுட்ப பற்றாக் குறையினையும் நிவர்த்தி செயவதற்காக இந்திய திட்டக் குழுவின் பரிந்துறையின் படி தேசிய மூங்கில் குழு உருவாக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசால் ரூபாய் 568.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நோக்கம் :-
தகுதியான வனமல்லாத பகுதிகளில் அதிக அளவில் மூங்கில் காடுகளை உருவாக்குதல்.

சரியான விற்பனை சந்தைகளை உருவாக்குதல் :-
மூங்கில் உற்பத்தியாளர்களை ஒன்று சேர்த்து மூங்கில் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி அளவை அதிகப்படுத்துதல்.

கிராமப்புற மற்றும் நகர்புரங்களில் மூங்கில் சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலை வாயப்பை அதிகப்படுத்துதல்.

மூங்கில் வளர்ப்பின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.
மூங்கில் 47 பங்கு கார்பன் டை ஆக்சைடை உட்கிரகித்து 35 பங்கு ஆக்ஸிஜனை வெளி விடுகிறது. ஒரு வருடத்தில் ஒரு ஏக்கர் மூங்கில் 12.7 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்கிறது.

மூங்கில் காடுகள் 5-6 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை மகசூலைத் தருகின்றன. இதனால் பொருளாதார ரீதியாக மற்ற மரங்களை விட அதிக வருமானத்தை மிக க்குறைந்த காலத்திலேயே மூங்கில் ஈட்டித் தருகின்றது. சீரிய சாகுபடி முறைகளை மேற்கொண்டு மூங்கில் சாகுபடி செய்தால் 6 வது ஆண்டில் இருந்து வருடந்தோறும் ஏக்கருக்கு ரூ.20,000 மிதல் ரூ.30,000 வரை லாபம் ஈட்டலாம்.

தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் அரசு வழங்கும் உதவிகள் :-

1. வனமல்லாத பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் ஒரு எக்டர் மூங்கில் சாகுபடி செய்ய ஆகும் செலவில் 50 சத மானியத்தை, முதல் வருடம் ரூ.4000-00 ம் இரண்டாம் ஒருடம் ரூ.4000-00 என மொத்தம் ரூ.8000-00 மானியமாக வழங்கப்படுகிறது. இரண்டாம் வருடம் 90 சத செடிகள் உயிருடன் இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 4 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

2. மூங்கில் பயிருக்கு சொட்டு நீர் பாசனம் ( Drip Irrigation System ) அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.20,000-00 மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 4 எக்டர் வரை சொட்டு நீர் பாசனம் அமைக்க இம்மானியம் வழங்கப்படுகிறது.

3. மூங்கில் சாகுபடி குறித்த பயிற்சிகள் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவல்லுனர்களைக்கொண்டு வழங்கப்படுகிறது.

4. மூங்கில் சாகுபடி செய்யும் விவசாயிகளைக்கு ஒருகிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தல் எக்டருக்கு ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.200-00 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

5. செயல் விளக்க மூங்கில் தோட்டம்- அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 0.5 எக்டர் செயல் விளக்க மூங்கில் தோட்டம் அமைக்க ரூ.5000-00 மானியம் வழங்ப்படுகிறது.

இதைப்பற்றி பயிருட ஆர்வம் உள்ளவர்கள் அந்தந்த தோட்டக் கலை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

--------------------------------( மூங்கில் தொடரும் )

Thursday, December 11, 2008

மூங்கில்விதை நேர்த்தி, சேமிப்பு முறைகள்




மூங்கில்விதை நேர்த்தி, சேமிப்பு முறைகள்.

மூங்கில் விதை இனப்பெருக்க முறையில் நன்கு வீரியமுள்ள முளைப்புத்திறன் கொண்ட விதைகளைப் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மூங்கிலின் விதையின் முளைப்புத்திறன் அவை பூக்கின்ற தன்மையைப் பொறுத்தே மாறுபடுகிறது. பொமுவாக 30-35 வருட வயதுடைய மூங்கில்கள் ஒட்டு மொத்தமாக நன்கு பூத்துக் குலுங்கிய பின்பு முழுவதும் இறந்துவிடும். அதனால் விதை மூலம் உற்பத்தி செய்வது குறைந்து விடுகிறது.

விதைகள் நன்கு முதிர்ச்சியடைந்த பின்புதான் அறுவடை செய்ய வேண்டும். சேகரித்த விதைகளின் மேற்புரத்தோல் நன்கு பழுப்பு நிறமாகவும் கடினமாகவும் இருந்தால் அவைகள் விதைகளின் முதிர்ச்சித் தன்மையைக் காட்டுகிறது. நன்கு முற்றிய விதைகளைக் கொண்ட பூங்கொத்தை சாய்ந்தோ அல்லது மரத்தை கை மூலம் உலுக்கியோ புதிதாக கீழே விழும் விதைகளைச் சேகரிக்க வேண்டும். சரியாக முறைப்படுத்தப்பட்ட விதை தொழில்நுட்பங்களை கையாளுவதால் நல்ல தரமான விதைகளைப் பெறலாம்.

விதைசுத்திகரிப்பு

கதிரிலிருந்து விதைமணிகைப் பிரித்தெடுக்க அவற்றைத் தரையில் அடித்தோ அல்லது கைகளில் தேய்த்தோ சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூற்றி, தேவையற்ற்ற பொருட்களை தவிர்த்து பின்பு சேகரித்த விதைகளை மட்டும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவி பிறகு நன்கு முக்கிய விதைகளையும் பொக்கு விதைகளையும் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். நன்கு முதிர்ச்சி அடையாத விதைகளை தண்ணீரில் மேல் மிதக்கும். விதைகளைப் பெரிய விரிப்பின் மேலோ அல்லது வெள்ளை நிறப் பாலித்தின் விருப்பு மேல் பரப்பி நன்கு சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் காயவைக்க வேண்டும். பின்பு விதையின் ஈரப்பதம் பழைய நிலைக்குத் திரும்பும் வரை அதனுடைய ஈரப்பதத்தைக் குறைத்து சேமிக்க வேண்டும். விதைகளை காயவைக்கும் போது 4-5 முறை நன்கு கிளறி விட வேண்டும். அவ்வாறு செய்வதால் சீரான முறையில் விதைகளின் முளைப்புத் திறனை பாதிக்காமல் சேகரிக்கலாம்.

விதை நேர்த்தி.

மூங்கில் விதைகளை 100 பிபிஎம் ஜிப்ரலிக் அமிலத்தில் சுமார் 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு நன்கு உலர்த்தி விதைத்தால் விதையின் வீரியம் மற்றும் முளைப்புத்திறன் சுமார் 30 சதம் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் மூங்கில் விதையுடன் அஸோஸ்பைரில்லம் நுண்ணூட்டக்கலவை ஒரு கிலோ விதைக்கு 50 கிராம் என்ற அளவில் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு விதை மூலம் பூசும் கலவையைக் கொண்டு விதை முலாம் செய்து அவற்றை சுமார் 16 மணி நேரம் இருட்டறையில் வைத்திருந்து விதைத்தால் விதையின் முளைப்புத்திறன் விதைமுலாம் பீசப்படாத விதையைக் காட்டிலும் சுமார் 21 சதம் அதிகரிதுக் காணப்படுவதோடு நாற்றங்காலில் நல்ல வளமான நாற்றுக்களைப் பெறலாம்.

விதை சேமிப்பு.

மூங்கில் விதைகளை சாதாரண அறை வெப்ப நிலையில் கால்சியம் குளோரைடு கரைசலில் சேமித்து வைத்தால் அதனுடைய மூளைப்பு மற்றும் வீரியம் பாதுகா க்கப்படும். மேலும் டை-சோடியம் ஹைடரஜன் பாஸ்பேட் (10-4 அ) அடர்த்தியுள்ள கரைசலில் ஊறவைத்து உலரவைப்பதைக் காட்டிலும் சிறந்த முறையாகும்.

பொதுவாக விதையின் முளைப்புத்திறன் ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும். எனவே, விதைகளின் முளைப்புத் திறனை 60 நாட்களுக்கு மேல் நீடிக்க மணல் நிறப்பப்பட்ட கோணிப் பைகளில் சேர்த்து வைக்க வேண்டும்.

மூங்கில் விதையை ஆஸ்டர்னேரியா, ஆஸ்பர்சில்லஸ் செர்க்கோஸ்போரா, பெனிசிலியம் மற்றும் சூபாமாப்சிஸ் போன்ற பூன்சான்கள் விதையைத் தாக்கும் வாய்ப்புள்ளது.. எனவே, விதையின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தற்போது ட்ரைகோடர்மாவிர்டி (4 கிராம், கிலோ) மற்றும் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் (10) கிராம், கிலோ) என்ற எதிர் உயிர் பூஞ்சானம் மற்றும் எதிர் உயிர் பாக்டீரியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செயவதனால் விதையின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப் படுத்தி நல்ல தரமான நாற்றுக்களைப் பெறலாம். பொதுவாக சேகரித்த மரவிதைகளை சில நாட்கறுக்குள் பயன் படுத்தாவிட்டால் அவற்றின் முளைப்புத்திறன் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, அதிகளவு தரமான மரவிதைகள் கிடைக்க விதைகளை மரத்திலிருந்து குறிப்பிட்ட காலத்தில் சேகரித்துப் பிரித்தெடுத்துச் சுத்தம் செய்து பாதுகாப்பான இடத்தில் தகுந்த முறையில் சேகரித்து வைத்தல் மிகவும் அவசியமாகும்.


------------------------------- (மூங்கில் தொடரும்)

Wednesday, December 3, 2008

தாவரக் கள்.

தாவரக் கள்.

தமிழ்நாட்டில் பனைமரங்களும், தென்னை மரங்களும் அதிக அளவில் உள்ளன. இந்த இரு மரங்களிலிருந்து பாளையிலிருந்து அறுத்தவுடன் ஒரு திரவம் வரும் அதை ஒரு சிறு சொப்புப் பானை கொண்டு தினமும் காலை மாலை சேகறிப்பது தான் பதநீர். அந்த பதநீர் சேகறிக்கும் பானையில் உட்புரம் சுண்ணாம்பு பூசி எடுப்பது பதநீர், சுண்ணாம்பு பூசாவிட்டால் கிடைப்பது கள். கள் நாட்படவைத்திருந்தால் போதையுண்டாகும். பதநீரைக் காச்சி பதத்துடன் எடுத்து குழிகளிலோ, அச்சுக்களிலோ வார்த்து காய்ந்த பின் எடுத்தால் அது வெல்லம். இனி கள் பற்றி மாநில விவசாய அணி செயலாளர் தாத்தூர் திரு.சுப்பிரமணியம் மற்றும் மாநில துணைத்தலைவர் திரு.பாலசுப்பிரமணியம் இருவரும் கள் இறக்க விதித்திருக்கும் தடையை நீக்கக் கோருவதற்கான காரணங்களை கீழே காண்போம்.

1.கள் தமிழ்நாட்டின் சுதேசி பானம்.

2.சங்க காலத்தில் உணவின் ஒரு பகுதியாக கள் இருந்து வந்துள்ளது. இதை யாரும் தவராக எடுத்துக் கொள்ள வில்லை. சங்க இலக்கியங்களே இதற்குச்சான்று.

3. கள்ளும் கரும்புச்சாறும் ஏறத்தாழ ஒன்றுதான். காலை மாலை என இரு வேளை இறக்கும் கள் போதை தராது. புளித்துப் போனால் தான் போதை இருக்கும். புளித்த கரும்புச் சாற்றிலும் இதே போதை இருக்கும். புளிக்காத கள் ஒரு சத்தான உணவு என்பது மகாத்மா காந்தி போன்ற மகான்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று.

4. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நீதி நூல்களில் மட்டுமே கள்ளுண்ணாமை வலியுருத்தப் பட்டுள்ளது.

5. சுதந்திர இந்தியாவில் மது விலக்கை அமல்படுத்த முடியாத காரணத்தால், குஜராத் மாநிலத்தைத் தவிர இந்தியா எங்கிலும் மது விலக்குக் கைவிடப்பட்டது.

6. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் மது விலக்கு இல்லை. கள், சாராயம் மற்றும் அயல் நாட்டு மது வகைகளும் அங்கே விற்கப்பட்டு வருகின்றன.

7. தமிழ்நாட்டில் கூடுதலான கெடுதி விளைவிக்க க்கூடிய அயல் நாட்டு இந்தியத் தயாறிப்பு(IMFL) மது வகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுதேசி தயாறிப்பான கள்ளுக்குத் தடை விதித்துள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது அரசு கொண்டுள்ள விரோதப் போக்காகும்.

8. உலக அளவில் சுதேசி மதுவிற்குத்தடையும் விதேசி மதுவிற்கு அனுமதியும் கொடுத்திருப்பது எங்கும் இருக்க முடியாது. தமிழ் நாட்டைத் தவிர.

9. கள் உணவு ஊட்டத்திற்கான (Nutritional) சத்துக்களைக் கொண்டுள்ள ஒரு இயற்கையான பானம். சில நேரங்களில் மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் நலத்திற்குத் தீங்கு தராது. பக்க விளைவு இராது. இதில் போதைக்குக் காரணமான ஆல்க்ஹாலின் அளவி குறைவு. அதே நேரத்தில் (IMFL) மதுவில் போதை ஊட்டும் ஆல்கஹாலைத் தவிர எதுவும் இல்லை.

10. கள்ளை விட (IMFL) கூடுதலான கெடுதி விளைவிக்க க்கூடியது என்பது விஞ்ஞானிகளாலும் மருத்துவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அனைத்து மக்களுக்கும் இது தெரியும்.

11. தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு உண்மையல் மக்கள் நலனில் அக்கறை இருந்திருக்குமேயானால் (IMFL) மதுவிற்குத் தடை விதித்திருக்க வேண்டும். கள் இறக்க அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

12. சட்டம் என்பது கெடுதி விளைவிக்கக்கூடியது. குறைவான கெடுதி விளைவிக்கக் கூடியதே சட்டமாக இயற்றப்படவேண்டும்.
(LAW IS AN EVIL, LESSER EVIL WILL BE ENACTED AS LAW)

சட்டத்திற்கான இந்த வரையறைப்படி பார்த்தால் கள்ளுக்குத் தடை விதித்திருக்க க்கூடாது.(IMFL) க்கு மட்டும் அனுமதி தந்திருக்கக்கூடாது.

13. தென்னை, பனை மரங்களை வைத்திருப்பவர்களும், மரம் ஏறுபவர்களிம் பல லட்சம் பேர்கள், இவர்களால் ஒன்றுபட்டு ஆட்சியாளர்களைக் கவனிக்க முடியாது அதே நேரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே
‘டாஸ்மார்க்’ நிறுவனத்திற்கு(IMFL) மது தயாரித்துக் கொடுக்கிறார்கள். அவர்களால் ஆட்சியாளர்களைக் கவனிக்கும் விதத்தில் கவனிக்க முடிகிறது. இதன் மூலம் 1000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகை கை மாறுவதாக மக்களிடையே பேசப்படுகிறது.

14. கவனிக்கும் ஒரு கண்ணுக்கு வெண்ணெய், கவனிக்காத மறுகண்ணுக்குச் சுண்ணாம்பு என்பதில் நியாமும் இல்லை. நடுவு நிலைமையும் இல்லை.

15. இதில் ஆட்சியாளர்கள் நேற்றும் ஆதாயம் பெற்றார்கள். இன்றும் பெற்று வருகிறார்கள். நாளையும் பெறுவார்கள். தலைமை மட்டும் மாறி இருக்கும். ஆட்சி நிரந்தரமானது அன்று. ஆனால் சுரண்டல் நிரந்தனமானது. விழிப்புணர்வு இல்லாதவரை இந்த நிலை மாறாது. மக்களின் மனச்சாடசிக்கும் இது தெரியும்.

16. தமிழ்நாட்டில் குடிப்போர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி இருக்கலாம். இவர்களில் கூடுதலான விலை கொண்ட வெளிநாட்டு மதுவை வாங்கிக் குடிக்கும் பொருளாதாரத் தகுதி 25 லட்சம் பேர்களுக்கு மட்டுமே இருக்கும். மீதி 75 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கும் கீழாக வாழும் எளிய மக்களே ஆவார்கள். இவர்கள் குடிப்பதற்கு செலவிட்டது போக குட்ம்பச் செலவுக்குப் பணம் கொடுக்க முடியாத தால் பல குடும்பங்கள் சொல்லண்ணாத் துன்பத்திற்கு ஆளாகியுள்ளன. இதன் காரணமாக இன்றைய நடைமுறையில் பரவலாகக் குடும்ப
ப் பெண்களும் கூடக் கள் வரவுக்கு எதிர்புத் தெரிவிக்க மாட்டார்.

17. இன்று தமிழ்நாட்டில் பட்டி தொட்டிகளிலெல்லாம் அயல் நாட்டு மதுக்கடைகளைத் திறந்து ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது. அதுவும் அரசே நேரடியான சுரண்டலில் புகுந்து விளையாடுகிறது. மக்கள் ஆடுகளாக இருந்துவிடக்கூடாது. ஆட்சியாளர்கள் ஓநாய்களாக மாறிவிடக்கூடாது.

18. கள்ளுக்கு அனுமதி இருந்தால் கிராமப் பணம் வெளியே போகாது. சிலருடைய கைகளில் செல்வம் குவிவது குறையும். கிராமப் பொருளாதாரம் மேம்படும்.

19. தென்னை பனை விவசாயிகளின் வருமானம் ஒரளவு கூடும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புப் பெருகும். களையாகக்கருதி வேகமாக வெட்டப்பட்டு வரும் ‘காமதேனு’ ‘கற்பகத்தரு’ என்று சொல்லப்பட்ட பனை மரங்கள் காப்பாற்றப்படும். கள் இறக்கப்படும் தென்னை மரங்கள் காப்பாற்றப்படும். கள் இறக்கப்படும் தென்னை மரங்கள் ’ஈரியோ பைட்’ பூச்சி தாக்குதலில் இருந்து தப்பும், மொத்தத்தில் தென்னை, பனை மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நியாயமான நடவடிக்கையாகும் இது.

இது போன்று மேலும் பல கருத்துக்கள் வெளியிட்டார்கள். நன்றி விவசாய அணிக்கு.

Friday, November 28, 2008

மூங்கில்.




மூங்கில்.

மூங்கில் ஒரு மரவகைப் புல். இது தென் கிழக்கு ஆசியாவில் அதிகமாகக் காணப்படும். உலகளவில் 1250 வகைகள்உள்ளன. இந்தியாவில் 23 ரகத்தில் 125 பிரிவுகள் உள்ளன. இந்தியாவின் மொத்த மூங்கில் காடு பரப்பளவு10.03 மில்லியன் ஹெக்டர் ஆகும். இது12.8 சதவிகிதம் தான். அதிகமாக மூங்கில்கள் வளரும் இடங்கள் அஸ்சாம், மணிப்பூர், மேகாலையா, மீசோராம், நாகாலேண்டு, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாட்டில் மேற்கு மலைத்தொடர், சேர்வராயன் மலை, கொள்ளி மலை, கொடைக்கானல், சிறுவாணி, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, கிழக்கு மலைத்தொடர்ச்சி போன்ற இடங்கள். உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது வியாபார நோக்குடன் தரிசு நிலங்களிலும் சம வெளிகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

மூங்கில்களில் முள்ளில்லா மூங்கில், (பேம்புசா டுல்டா, பேம்புசா நியுடன்ஸ், பேம்புசா பல்கோவா) மூள் உள்ள மூங்கில் என்று இரு வகையாகப் பிறிக்கலாம். தற்போது முள் இல்லாத மூங்கில் அதிகமாகப் பிரபலமடைந்து வருகிறது. முக்கியமாக இருப்பது முள் மூங்கில், கல்மூங்கில், பச்சைமூங்கில், தட்டைமூங்கில், வல்காரிஸ் மூங்கில், சாப்பாட்டு மூங்கில், பெருமூங்கில், புத்தர் தொந்தி மூங்கில் போன்றவை. நடக்கும் மூங்கில் என்ற வகையுண்டு. நன்றாகத் தண்ணீர் தேவை. இதன் தூர் பக்கவாட்டில் பரவிக்கொண்டே போகும். வேகமான வளர்ச்சியுடையது. மூங்கில்களை நாற்றாக இருக்கும் பொழுது யாராலும் அதன் இனம் கண்டு சொல்ல முடியாது. பெரிதாகும் போது அதன் இலைகள், தோகை-மட்டை-கணு இடைவெளி, கணுவில் தோன்றும் வட்டங்கள் இவை கொண்டு அதன் இனத்தைக் கண்டு பிடிக்கலாம்.

கல் மூங்கில் தட்டை மூங்கில் இவை இரண்டும் 20 வருடத்திலிருந்து 60 வருடங்களில் பூக்கள் பூத்து, முதிர்ந்து, விதையாகி (மூங்கில் நெல்) அந்த மூங்கில் புதர் அத்துடன் காய்ந்து அழிந்து விடும். இதுவரை மூங்கில் இந்த ஆண்டில் தான் பூக்கும் என்று உறுதியாகக்கண்டு பிடிக்கவில்லை. பூக்காத மூங்கில்களும் உள்ளன. மூங்கில் 150 அடி உயரம் வரையில் வளரும். ஒரே நாளில் 3 மீட்டர் வளர்க்கூடிய மூங்கில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது.

மூங்கில் வடிகால் வசதி உள்ள மண் வகைகளில் வளர்க்கலாம். மூங்கிலுக்கு ஏற்ற மண் இரகங்கள் வண்டல் மண், படுகை நிலங்கள் மற்றும் இதர நிலங்களாகிய சரளை மண், கண்மாய் கரை மண், ஓடை மண், வண்டல் மண் கலந்த களிமண் பூமி மற்றும் மணற்பாங்கான நிலங்களுக்கு ஏற்றது. மழையளவு-1270 மி.மீ.-6350 மி.மீ., வெப்பளவு-உயர்ந்தளவு 42 டிகிரி முதல் 45 டிகிரி சென்டிகிரேடு வரை.

சூரிய ஒளி அதிகமாகவும் மற்றும் மழை நன்கு பெய்யும் இடங்களில் மூங்கிலின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மழை குறைவாக உள்ள பகுதிகளில் நீர் பாச்சுவதின் மூலம் கூட மூங்கிலை வளர்க்கலாம். மூங்கில் மேட்டுப் பகுதிகளிலும் மற்றும் மலைச்சரிவுகளிலும் நன்கு வளரக்கூடியது. பாறை அடியில் ஆகாது, களிமண் ஆகாது, சட்டு இருக்க க்கூடாது. உவர்மண் ஆகாது.களர் மண் ஆகாது. உப்புத்தண்ணீரில் வளரும், சப்பைத்தண்ணீரில் வளராது, 5 அடி ஆழ செம்மண்ணாக இருந்தால் நன்கு வளரும்.

மூங்கில் நாற்றுத்தயார் செய்ய இரு வகையுண்டு. ஒன்று விதை மூலம் நாற்றுத்தயார் செய்து நடுதல். மற்றது விதையில்லாமல் மூங்கிலை உற்பத்தி செய்யலாம்.

1.களிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.-----------------------
2. பக்கக்கிளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.--------------------
3. வேறுடன் கொண்ட களிகளைப் பயன்படுத்தல்.
4. பதியன் மூலம் மூங்கில் நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.----------------------
5. களிகளை அகற்றி நடும் முறை. -----------------------
6. திசுமுறை வளர்ப்பு. (அடுத்த கட்டுரையில் விளகம் அளிக்கப்படும்)

மூங்கில் உபயோகம் தற்போது அதிகமாக உள்ளது. மூங்கில் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் சைனா முதலிடம் வகிக்கிறது, அதற்கு அடுத்து இந்தியாதான். மூங்கிலில் பலதரப்பட்ட கூடைகள் முடையப் படுகிறது. கைவினைப் பருள்கள் செய்கிறார்கள். மூங்கிலிலிருந்து தரமான வெண்மையான கிழியாத பேப்பர் செய்யப்படுகிறது. நாள்பட ஆனாலும் பேப்பர் பழுப்பு நிறமாக மாறாது. புல்லாங்குழல், மோர்சிங், போன்ற இசைக்கருவிகள், பலவிதமான பாய்கள், ஆண்கள் அணியும் சட்டைகள், ஊதுபத்திக் குச்சிகள், மூங்கில் பிளைவுட், வீட்டு உட்புற அழகு சாதனங்கள், ஊருகாய், சல்லடை, மூங்கில் தொட்டி, ஏணிகள் ஆகியவை செய்யப்பயன்படுகிறது. ஒருவிதமான இரண்டரை வருடமான மூங்கில் குறுத்திலிருந்து சாப்பாடு செய்யப்படுகிறது, மலைவாழ் மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மூங்கில் சூப் நட்சத்திர ஓட்டல்களில் விற்கப் படுகிறது. கிராமங்களில் வீடுகட்டப் களிகள் பயன் படுகிறது. கட்டிட வேலைக்கு முட்டுக்கள் கொடுக்கப் பயன்படுகிறது. மூங்கில் மண் அறிப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு இடையில் ஊடுபயிர்கள் கூட வளர்க்கப்படுகிறது. மூங்கில் நட்ட 3 ஆண்டுகளிலிருந்து லாட வடிவில் களிகளை வெட்டி விற்கலாம். பின் இரண்டுஆண்டுக்கு ஒருமுறை வெட்டிக் கொண்டே இருக்கலாம். மூங்கில் இலை கால்நடைகளுக்குத் திவனமாக் பயன்படுகிறது, மூலிகையாகவும் பயன்படுகிறது. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்
தொடரும்