Friday, September 19, 2008

பாமரோசாபுல்


பாமரோசாபுல்

பாமரோசாபுல் என்பது சாதாரண கணம்புல் போன்று தான் இருக்கும். சுமார் 3 அடிஉயரம் வரை அதிக பக்கப் பயிர்களுடன் வளரும். இதன் ஆங்கிலப் பெயரும் குடும்பமும்-CYMPOBLGON SP.,GRAMINEAE. இது ஒரு வாசனைப்புல். இது எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கரிசல் மண்ணில் நன்கு வளரக்கூடியது. இது வளர்ச்சியைத் தாங்கி வளரும் பயிர். இது இரவையிலும் மானாவரையிலும் வளரக் கூடியது. தண்ணீர் வசதி இருந்தால் குறுகிய காலத்தில் நன்கு வளர்ந்து பூக்கள் தோன்றும். இதன் புல்லிலிருந்துவாசனை எண்ணெய் தயார் செய்யப் படுகிறது. அந்த வாசனை எண்ணெய வாசனைப் பொருட்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. மேலும் இது பூஞ்சானைக் கொல்லியாக மிளகாயில் பழவாடல் நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

பாமரோசாபுல் பயிரிட நிலத்தை நன்கு உழுது சமப் படுத்தித் தொழு உரம் இட்டுத் தயார் நிலையில் வைக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதை ரூ.100 க்குள் கிடைக்கும். விதைகளை நாற்றுப் பாத்தி அமைத்து நெருக்கமாகத் தூவி தண்ணீர்பாச்ச வேண்டும். நன்கு பராமரித்து 2 மாதம் வளர்ந்த அரை அடி உயரமுள்ள நாற்றுக்களை பண்படுத்திய நடவு வயலில் 1.5 அடிக்கு ஒரு அடி இடைவெளியில் நட வேண்டும். தண்ணீர் பாச்சி வரவேண்டும். மானாவாரியாக இருந்தால் மழை காலத்தில் நடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழு உரம், 10 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிசத்து, 20 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை இட வேண்டும். 10 கிலோ துத்த நாக சல்பேட் கரைசலைச் செடிகளுக்கு தெளிப்பது எண்ணெய மகசூலை அதிகரிக்கிறது. ஒவ்வொரு அறுவடைக்குப்பின் 17 கிலோ யூரியாவை இடுவதால் இலை மகசூல் அதிகமாகக்கிடைக்கும்.

நட்ட ஆறுமாதம் கழித்து பூக்கும் தருணமே அறுவடை செய்ய ஏற்ற பருவம். இலைகளிலிருந்தும் பூங்கொத்துக்களிலிருந்தும் எண்ணெய் எடுக்கலாம். பின் வரும் மாங்களில் 3 மாத த்திற்கொருமுறை அறுவடை செய்யலாம். இந்தப்புல்லிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கென்றே பாயிலர்கள் தனி நபர்கள் வைத்துள்ளார்கள். அறுவடை செய்த இலைகள் ஒரு நாள் உலர்த்தி எண்ணெய் எடுக்கலாம். இந்தப் புல் 5 வருடங்களுக்குப் பின் கட்டைகளைத் தோண்டி எடுத்துவிட்டு மறுபடியும் நிலத்தை வழப்படுத்தி நாற்றுக்கள் மேலும் நடலாம். இந்தப் பயிர் செய்வதால் பின் தங்கிய மாவடமான தர்மபுரிக்கு ஏற்ற தொழிலாகத் தென்படுகிறது. ஆட்கள் கூலியும் குறைவே. அங்கு பாளையம் புதூர் மற்றும் அன்னசாகரம் ஆகிய ஊர்களில் எண்ணெய் எடுக்கும் பாயிலர்கள் தனி நபர்கள் அதிகமாக வைத்துள்ளார்கள். தற்போது ஒரு லிட்டர் எண்ணெய் ரூ.800-00 க்கு விற்கப் படுகிறது. அங்கு பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.

தென் மாவட்டங்களில் அதை அதிகமாப் பயிரிடுகிறார்கள்.சேலம், கோபி, தாளவாடி போன்ற இடங்களில் பயிர் செய்கிறார்கள். கோவை-துடியலுரைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆனைகட்டிக்கு அடுத்து 20 ஏக்கரில் பாமரோசபுல் வளர்த்தி சொந்தமாக பாயிலரும் வைத்து எண்ணெய் எடுத்துப் பார்த்தார் கூலி ஏற்றம் பில்லின் அவுட்புட் குறைவாகவே வந்துள்ளதாம். அதனால் அந்த ஏரியாவுக்குத் தகுந்த வெட்டிவேர் ஒரு ஏக்கர் போட்டுள்ளதாகச்சொன்னார். அவரது தொடர்பு எண்-9443076985.

இந்த பாமரோசாபுல் வளர்த்தி அனுபவம் பெற்றவர்கள் தங்களது கருத்துக்களை திரு.ஓசைசெல்லா அவர்களுக்குத் தெறிவிக்கலாம். தொடர்பு எண்-9994622423.

---------------------------------------------(தொடரும்)

Monday, September 8, 2008

மூலிகையும், மரமும் வளர்ப்பு


நான் 6-3-2004 முதல் கோவை வன மரபியல் கோட்ட அலுவலகம் மற்றும் வன விரிவாக்க மையத்தின் மாதாந்திர கருத்தாய்வு பகிர்ந்து கொள்வதற்காக விவசாயிகள் ஒன்று கூடினர். அதில் நானும் அன்று முதல் கலந்து கருத்துக்களைக் கேட்டறிந்தேன். இந்த கூடுதல் ஒவ்வொரு மாதமும் 6ந் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் வரை நடந்து வந்தது. அப்போது பதிவு பெறாத சங்கமாக நடந்து வந்தது. அப்போது அதன் தலைவராக இருந்தவர் டாக்டர் திரு. சுகுமார் ராஜா. அப்போது ஏனோ தானோ என்று கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது டி.சி.எப். ஆக இர்ந்தவர் திரு. எஸ்.கே. சண்முகசுந்தரம் ஐ.எப்.எஸ். துணை வன பாதுகாவலர் வன மரபியல் கோட்டம், கோவை. ஒவ்வொரு மாதமும் ஒரு மூலிகை பற்றி சித்தா டாக்டர் திரு. திருமலைசாமி விளகமளிப்பார். டாக்டர் திரு. சுகுமார்ராஜாவும் நோய்பற்றிக் கூறுவார் அதை குணப்படுத்துதல் பற்றி விவறிப்பார். அப்போது அந்த கூட்டம் நடைபெருவது யாருக்கும் அதிகமாகத் தெறியாது. அந்தக் கூட்டம் சிறியதாகவே இருந்தது. அதில் விவசாயிகள் சிலபேர், மூலிகை உற்பத்தி செய்வோர் சிலர், நிறுவனங்களிலிருந்து ஒரு சிலரும் வந்தனர். ஆனால் நிரந்தரமான உறுப்பினர் யாரும் கிடையாது. பெயருக்கு மூலிகை வளர்ப்போர் சங்கம் என்று இருந்தது. பின் திரு.சண்முகசுந்தரம் அவரகள் 2006 ல் திருவண்ணாமலைக்கு மாறுதலில் சென்றார். அவர் செல்லும் போதுஇந்த மூலிகை வளர்ப்போர் சங்கம் தொடர்ந்து செயல்பட அடுத்து வரும் அதிகாரி அனுமதிப்பாறா என்பது தெறியாது அதனால் சங்கம் நிறைவு செய்யச்சொன்னார். பின் 6-6-2006 ல் நடந்த கூட்டத்தில் ஒரு சங்கம் ஏற்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று அன்று கூடியிருந்தவர்கள் முடிவு செய்தார்கள். அதன் படி முறைப்படி தலைவராக கெ.தேவராஜன் அவர்களும் உபதலைவராக திரு. கெ.பி.குப்புசாமியும் செயலாளராக திரு.பி.வின்சென்ட் அவர்களும், உப செயலாளராக திருமதி. கண்ணம்மாள் ஜெகதீசன் அவர்களும், பொருளாளராக திரு. பாலசுப்பிரமணியம் அவர்களையும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தைப் பதிவு செய்யும் பணியை ஆடிட்டர் திரு.நாராயணசுவாமி அவர்களையும் (தற்போது கொள்கை பறப்புச்செயலாளர்) நியமிக்கப்பட்டது. அதற்கு அடுத்த கூட்டத்தில் சங்கத்தின் விதி முறைகள், சட்ட திட்டங்கள், விவசாயிகளும் மற்றவர்களும் பயன் அடைவது குறித்து விளக்கங்கள் அடங்கிய ‘பைலா’ உறுவாக்கி எல்லோரும் ஆமோதித்த பின் சங்கம் ‘கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்’ என்று பெயர் சூட்டப் பட்டது. தலைவர் வீட்டு முகவரியிலேயே பதிவு எண் 110/2006 எனப் பதிவு செய்யப் பட்டது. அதில் ஆண்டு சந்தா ரூ.120-00 என்றும் ஆயுள் சந்தா ரூ.1000-00 மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.20-00 என்று முடிவு செய்து தொடங்கப்பட்டது.


அதன் பின் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 6 ந்தேதி துணை வன பாதுகாவலர் அலுவலகம் (முதல் மாடி) மரபியல் கோட்டம் பாரதியார் ரோடு, கோவை-641043 என்ற இடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளான திரு. வைகைமணிசங்கர், அவர்களும் திரு உலகநாதன் அவர்களும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். சிறப்புப் பேச்சாளர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள், மூலிகை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி அதிகாரிகள் சந்தைப் படுத்துவோர் என பல தரப்பட்ட வர்களைஅழைத்து சங்கக் கூட்டம் சிறப்பாக நடந்து கொண்டுள்ளது. மூலிகைகளை இனம் காண ஆழியார் மூலிகைப் பண்ணை பார்வையிடப் பட்டது. இயற்கை வழி வேழாண்மை நடத்துவதையும் நேரில் பார்வையிடப்பட்டது. சங்க உறுப்பினர்கள் பல்வேறு பயிற்சிக்காக அனுப்ப ப்பட்டனர். அண்டை மாவட்டத்திலிருந்தும் அங்கத்தினர்கள் சேர்ந்தார்கள். தற்போது சுமார் 310 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது தான் பத்திரிக்கைகள் இச்சங்கத்தைப் பற்றி எழுதுகிறாகள். சென்ற மாதம் தமிழ்நாடு விவசாயபல்கலைக்கழகம் இரண்டு பிராஜக்ட் வெளியிட்டது. ஒன்று அக்ரோ பாரஸ்டரி மற்றோன்று கட்பிளவர் எக்ஸ்போர்ட் இதில் மரம் வளர்த்தி காகிதத் தொழிற்சாலைக்கு அனுப்ப நமது சங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.


சென்ற 6-9-2008 சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்திற்கு வரவேற்புறை திரு.எ.கெ.உலகநாதன் ஐ.எப்.எஸ். துணைவனப் பாதுகாவலர் வன மரபியல் கோட்டம் கோவை. முன்னிலை திரு.தியாகராஜன். எம்.ஏ. வன விரிவாக்க க்கோட்டம் கிருஷ்ணகிரி, சிறப்புரையாளர்கள் திரு.இருளாண்டி ஐ.எப்.எஸ். தலைமை வனப் பாதுகாவலர் வன விரிவாக்கம், சென்னை. மற்றும் திரு.எஸ்.கே. சண்முக சுந்தரம் ஐ.எப்.எஸ். துணை வனப் பாதுகாவலர், காடுவளர்ப்புத் திட்டம் திருவண்ணாமலை. அடுத்து மருத்துவ விளக்கவுரை டாக்டர் திரு.திருமலைசாமி, சித்த மருத்துவர் அய்யம்பனை மூலிகை பற்றிப் பேசினார்.

சென்ற ஆண்டு தனியார் நிலங்களிங் மரம் வளர்த்தல் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அதில் தகுதி பெற சிறு,குறு விவசாயியாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு தரிசு நிலச்சான்று, சிட்டா அடங்கல், எப்.எம்., பட்டாபுத்தகம் தேவை என்றனர் அதனால் விவசாயிகள் சான்று பெற அவதிப்பட்டனர். தன்னிடம் உள்ள சிறிய நிலத்தில் நெடுங்காலப் பயிரான மரத்தை நட விருப்பமில்லை. அதனால் ஆணைகளை மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தலைவர் திரு.தேவராஜன் திரு.இருளாண்டி தலைமை வனப் பாதுகாவலர் விரிவாக்கம் அவர்களிடம் கேட்டார் ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. பல்லடத்தைச் சேர்ந்த விவசாயி பத்தாயிரம் சந்தனமரம் நாற்றுக்கள் நட்டு 2 வருடம் ஆகிறது அதற்குப் பாதுகாப்புக் கேட்டார். அது 15 வது வருடத்தில் பலன் கிடைக்கும் என்றார். மற்றொருவர் விதைகள் கேட்டார் ஆனால் இங்கு விதைக் கிடங்கில் விதை 3 ஆண்டுகளாக சேகரிப்பதில்லை, இருப்பு இல்லை.


திரு.சண்முகசுந்தரம் ஐ.எப்.எஸ். அவர்கள் பேசும் போது கேட்ட கேள்விகளுக்கு சங்கத் தலைவர் திரு.தேவராஜ் பதில் கூற முடியவில்லை. அந்தக் கேள்விகள்-

1. இந்த சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லை என்ன நடவடிக்ககை எடுக்கப்பட்டது?

2. இதுவரை சங்கத்திற்கு நிதி ஒதுக்கப் படவில்லை என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?

3. வங்கிகளுக்கு நிதி உதவி கேட்டு எந்த பிராஜக்ட் அனுப்பவில்லை ஏன்?

4. வங்கிகளிடம் கடன் பெறுவது திருப்பிக் கட்டுவது குறித்த பிராஜக்ட்டுகள் எங்கே?

5. தொழில் நுட்ப திறமையாளர்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ளதா?

6. கூட்டம் வனத்துறை அலுவகத்தில் நடத்தப்படுவதை தவிர்த்திருகலாமே ஏன்?

7. சங்கத்திற்கு மத்திய நர்சரி ஏன் ஏற்படுத்தவில்லை?

8. விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு மார்கட் வசதி ஏன் ஏற்படுத்தவில்லை?

9. சங்கம் மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுக்கள் ஏன் அளிக்கப் படவில்லை.

10. எத்தனை பிராஜக்டுகள் அனுப்ப ப்பட்டுள்ளன?

11. சங்கம் வனத்துறைக்கு என்ன செய்கிறது?

12.சங்கத்திற் கென்று வெப்சைட் தனியாக ஏன் ஏற்படுத்த வில்லை?

13. கலைக்டரிடம் சங்கம் பற்றி செயல் பாடு ஏன் தெறிவிக்க வில்லை? விவசாயிகள் குறை தீர்க்கும் மாதாந்திர கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ள வில்லை?

14.உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை ஏன் வழங்கப் படவில்லை?

15. சங்கத்திற்கென்று கம்யூட்டர், புரொஜகடர் ஏன் வாங்கவில்லை?

மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் கூற இயலாது. இவை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும். இந்த வலைப் பதிவை பார்ப்பவர்கள் உறுப்பினர்கள் தங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெறிவிக்கலாம். (தொடரும்)

Sunday, September 7, 2008

காட்டாமணக்கில் பயோடீசல்.


காட்டாமணக்கில் பயோடீசல்.


காட்டாமணக்கு பல வகையான மண்ணில் வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய நீண்ட கால ஒரு எண்ணெய்வித்துப் பயிர். கச்சா எண்ணெய் குறைந்து வருவதால் மாற்று எண்ணெய் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுவரும் நிலையற்ற தன்மையால் எதிர்காலத்தில் தாவர எண்ணெயை அரிய பொருளாக கட்டாயம் பயன் படுத்த வேண்டிய நிலை ஏற்படும். டீசலால் சுற்றுப் புறம் மாசுபடுகிறது. டீசலுக்குப் பதிலாக ‘தாவர எண்ணெயும்’ (பயோ டீசல்) பெட்ரோலுக்குப் பதிலாக ‘எத்தனாலும்’ எரிபொருளாக மாறும். தாவர எண்ணெயை எரி பொருளாகப் பயன் படுத்த மத்திய அரசு ஊக்கப் படுத்தி வருகிறது. காட்டாமணுக்கு, புங்கன் வகைகளிலிருந்து பயோடீசலும் சர்க்கரைச்சத்து நிறைந்த உணவுப் பொருளிலிருந்து எத்தனாலும் உற்பத்தி செய்யலாம். பயோடீசலின் தேவை அதிகம் இருப்பதால் விவசாயிகள் காடாமணக்கு மற்றும் புங்கள் ஆகிய மர வகைகளை பயிர் செய்து பலன் பெறலாம். மரவகைப பயிர்களை பயிர் செய்ய மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

காட்டாமணக்குப் பயிரிட கட்டிங் மூலமும் விதை மூலமும் பயிர் செய்யலாம். நன்றாக உழுத நிலத்தில் 2 மீ. x 2 மீ இடைவெளியில் 30 x 30 x 30 செ.மீ. என்ற அளவில் குழிகளை எடுக்க வேண்டும். எடுக்கப் பட்ட குழிகளில் 2 கி. தொழு உரம் இட்டு அதனை மண்ணோடு கலந்து குழியை நிரப்பிய பின் நடவினை மேற்கொள்ள வேண்டும். தரமான நாற்று வேர் 45 செ.மீ. நீளமும், தண்டின் பருமன் 2 செ.மீ. இருப்பது அவசியம். பருவமழை காலத்தில் நடவினை மேற்கொள்ளலாம். நடவு செய்த 6 வது மாதத்தில் முதல் கவாத்து 1.5 அடி உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். பின் 2 முறை ஒரு வருடத்திற்குள் செய்ய வேண்டும். அப்போதுதான் பக்கக் கிழைகள் அதிகமாக வளரும்.

காட்டாமணக்குக் கிடையில் ஊடு பயிராக பயிறு வகைகள், குதிரைவாளி, எள், கடலை போன்ற உயரம் குறைந்த ஊடுபயிர்களைச் பயிர் செய்யலாம். காட்டாமணக்கின் அடியில் நிலப்பொர்வை அமைக்க வேண்டும். அப்போது தான் ஈரப் பதம் விரைவில் உணராது. பயிர் பாது காப்பில் இலை,பூ பிணைப்பான், தண்டு காய் துளைப்பான் சாறு உரிஞ்சும் பூச்சிகள் சாம்பல் நோய், வேர் அழுகல் இவைகளைஅறிந்து எதிர்ப்பு மருந்து தெளிக்க வேண்டும். காட்டாமணக்கு 2 வது ஆண்டு முதல் 35 ஆண்டுகள் மகசூல் தரக்கூடிய பயிராகும். ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்களில் பூ பூக்கும் பின் மூன்று மாதத்தில் காய்கள் விட்டு பின் பழுத்தபின் அறுவடை செய்ய வேண்டும். விதைகளில் 32 முதல் 35 சதவீதம் வரை எண்ணெய் சத்து இருக்கும். ஒரு ஏக்கரில் 1000 செடிகள் பயிரிடலாம். ஒரு ஏக்கருக்கு1000 கிலோ முதல் 2000 கி. வரை எதிர் பார்க்கலாம். ஒரு ஏக்கர் நாற்றுகள் நட 250 கி. முதல் 300 கி. விதை தேவைப்படும். காட்டாமணக்கு செடிகளுக்கு இடையில் தேனீக்கள் பெட்டியை வைத்து பராமரிக்கலாம். விதையின் தன்மைக்கேற்ப டன் ஒன்றுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை ஆண்டு வருமானம் கிடைக்கும். காட்டாமணக்கு வளர்க்க வங்கிக் கடனும் கிடைக்க சாத்தியமே.

மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய உயர் ரக காட்டமணக்கு வகைகளை டாக்டர் திரு பார்த்தீபன் அவர்கள் தனது ஆராயச்சியில் வெற்றி பெற்று கண்டு பிடித்துள்ளார். இதை அங்கீகாரத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த வகைப் பயிர் ஒரே வருடத்தில் பயனுக்கு வந்து விடும் மேலும் இரண்டு மாத த்திற்கு ஒரு முறை காய்கள் கொத்தாக காய்க்கின்றன நல்ல ஆதாயத்தைத் தருகின்றது. இந்த வகைகளை குளோனிங் முறையில் நாற்றுக்கள் தயார் செய்து விவசாயிகளுக்குக் கொடுத்தால் காட்டாமணக்கு மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள். அரசே பயோடீசல் தொழிற்சாலையையும் ஏற்படுத்தினால் நேரடிக் கொள்முதல் மூலம் இடைத்தரகர் இன்றி விவசாயிகள் நன்மை அடைவார்கள். எதிர் காலத்தில் பயோடீசல் உற்பத்தி விவசாய்களின் கையில் தான் உள்ளது. அரசு ஊக்குவிக்க வேண்டும். (தொடரும்)