காட்டாமணக்கில் பயோடீசல்.
காட்டாமணக்கு பல வகையான மண்ணில் வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய நீண்ட கால ஒரு எண்ணெய்வித்துப் பயிர். கச்சா எண்ணெய் குறைந்து வருவதால் மாற்று எண்ணெய் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுவரும் நிலையற்ற தன்மையால் எதிர்காலத்தில் தாவர எண்ணெயை அரிய பொருளாக கட்டாயம் பயன் படுத்த வேண்டிய நிலை ஏற்படும். டீசலால் சுற்றுப் புறம் மாசுபடுகிறது. டீசலுக்குப் பதிலாக ‘தாவர எண்ணெயும்’ (பயோ டீசல்) பெட்ரோலுக்குப் பதிலாக ‘எத்தனாலும்’ எரிபொருளாக மாறும். தாவர எண்ணெயை எரி பொருளாகப் பயன் படுத்த மத்திய அரசு ஊக்கப் படுத்தி வருகிறது. காட்டாமணுக்கு, புங்கன் வகைகளிலிருந்து பயோடீசலும் சர்க்கரைச்சத்து நிறைந்த உணவுப் பொருளிலிருந்து எத்தனாலும் உற்பத்தி செய்யலாம். பயோடீசலின் தேவை அதிகம் இருப்பதால் விவசாயிகள் காடாமணக்கு மற்றும் புங்கள் ஆகிய மர வகைகளை பயிர் செய்து பலன் பெறலாம். மரவகைப பயிர்களை பயிர் செய்ய மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
காட்டாமணக்குப் பயிரிட கட்டிங் மூலமும் விதை மூலமும் பயிர் செய்யலாம். நன்றாக உழுத நிலத்தில் 2 மீ. x 2 மீ இடைவெளியில் 30 x 30 x 30 செ.மீ. என்ற அளவில் குழிகளை எடுக்க வேண்டும். எடுக்கப் பட்ட குழிகளில் 2 கி. தொழு உரம் இட்டு அதனை மண்ணோடு கலந்து குழியை நிரப்பிய பின் நடவினை மேற்கொள்ள வேண்டும். தரமான நாற்று வேர் 45 செ.மீ. நீளமும், தண்டின் பருமன் 2 செ.மீ. இருப்பது அவசியம். பருவமழை காலத்தில் நடவினை மேற்கொள்ளலாம். நடவு செய்த 6 வது மாதத்தில் முதல் கவாத்து 1.5 அடி உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். பின் 2 முறை ஒரு வருடத்திற்குள் செய்ய வேண்டும். அப்போதுதான் பக்கக் கிழைகள் அதிகமாக வளரும்.
காட்டாமணக்குக் கிடையில் ஊடு பயிராக பயிறு வகைகள், குதிரைவாளி, எள், கடலை போன்ற உயரம் குறைந்த ஊடுபயிர்களைச் பயிர் செய்யலாம். காட்டாமணக்கின் அடியில் நிலப்பொர்வை அமைக்க வேண்டும். அப்போது தான் ஈரப் பதம் விரைவில் உணராது. பயிர் பாது காப்பில் இலை,பூ பிணைப்பான், தண்டு காய் துளைப்பான் சாறு உரிஞ்சும் பூச்சிகள் சாம்பல் நோய், வேர் அழுகல் இவைகளைஅறிந்து எதிர்ப்பு மருந்து தெளிக்க வேண்டும். காட்டாமணக்கு 2 வது ஆண்டு முதல் 35 ஆண்டுகள் மகசூல் தரக்கூடிய பயிராகும். ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்களில் பூ பூக்கும் பின் மூன்று மாதத்தில் காய்கள் விட்டு பின் பழுத்தபின் அறுவடை செய்ய வேண்டும். விதைகளில் 32 முதல் 35 சதவீதம் வரை எண்ணெய் சத்து இருக்கும். ஒரு ஏக்கரில் 1000 செடிகள் பயிரிடலாம். ஒரு ஏக்கருக்கு1000 கிலோ முதல் 2000 கி. வரை எதிர் பார்க்கலாம். ஒரு ஏக்கர் நாற்றுகள் நட 250 கி. முதல் 300 கி. விதை தேவைப்படும். காட்டாமணக்கு செடிகளுக்கு இடையில் தேனீக்கள் பெட்டியை வைத்து பராமரிக்கலாம். விதையின் தன்மைக்கேற்ப டன் ஒன்றுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை ஆண்டு வருமானம் கிடைக்கும். காட்டாமணக்கு வளர்க்க வங்கிக் கடனும் கிடைக்க சாத்தியமே.
மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய உயர் ரக காட்டமணக்கு வகைகளை டாக்டர் திரு பார்த்தீபன் அவர்கள் தனது ஆராயச்சியில் வெற்றி பெற்று கண்டு பிடித்துள்ளார். இதை அங்கீகாரத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த வகைப் பயிர் ஒரே வருடத்தில் பயனுக்கு வந்து விடும் மேலும் இரண்டு மாத த்திற்கு ஒரு முறை காய்கள் கொத்தாக காய்க்கின்றன நல்ல ஆதாயத்தைத் தருகின்றது. இந்த வகைகளை குளோனிங் முறையில் நாற்றுக்கள் தயார் செய்து விவசாயிகளுக்குக் கொடுத்தால் காட்டாமணக்கு மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள். அரசே பயோடீசல் தொழிற்சாலையையும் ஏற்படுத்தினால் நேரடிக் கொள்முதல் மூலம் இடைத்தரகர் இன்றி விவசாயிகள் நன்மை அடைவார்கள். எதிர் காலத்தில் பயோடீசல் உற்பத்தி விவசாய்களின் கையில் தான் உள்ளது. அரசு ஊக்குவிக்க வேண்டும். (தொடரும்)
1 comment:
அருமையான தகவல்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
Post a Comment