Thursday, December 11, 2008

மூங்கில்விதை நேர்த்தி, சேமிப்பு முறைகள்




மூங்கில்விதை நேர்த்தி, சேமிப்பு முறைகள்.

மூங்கில் விதை இனப்பெருக்க முறையில் நன்கு வீரியமுள்ள முளைப்புத்திறன் கொண்ட விதைகளைப் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மூங்கிலின் விதையின் முளைப்புத்திறன் அவை பூக்கின்ற தன்மையைப் பொறுத்தே மாறுபடுகிறது. பொமுவாக 30-35 வருட வயதுடைய மூங்கில்கள் ஒட்டு மொத்தமாக நன்கு பூத்துக் குலுங்கிய பின்பு முழுவதும் இறந்துவிடும். அதனால் விதை மூலம் உற்பத்தி செய்வது குறைந்து விடுகிறது.

விதைகள் நன்கு முதிர்ச்சியடைந்த பின்புதான் அறுவடை செய்ய வேண்டும். சேகரித்த விதைகளின் மேற்புரத்தோல் நன்கு பழுப்பு நிறமாகவும் கடினமாகவும் இருந்தால் அவைகள் விதைகளின் முதிர்ச்சித் தன்மையைக் காட்டுகிறது. நன்கு முற்றிய விதைகளைக் கொண்ட பூங்கொத்தை சாய்ந்தோ அல்லது மரத்தை கை மூலம் உலுக்கியோ புதிதாக கீழே விழும் விதைகளைச் சேகரிக்க வேண்டும். சரியாக முறைப்படுத்தப்பட்ட விதை தொழில்நுட்பங்களை கையாளுவதால் நல்ல தரமான விதைகளைப் பெறலாம்.

விதைசுத்திகரிப்பு

கதிரிலிருந்து விதைமணிகைப் பிரித்தெடுக்க அவற்றைத் தரையில் அடித்தோ அல்லது கைகளில் தேய்த்தோ சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூற்றி, தேவையற்ற்ற பொருட்களை தவிர்த்து பின்பு சேகரித்த விதைகளை மட்டும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவி பிறகு நன்கு முக்கிய விதைகளையும் பொக்கு விதைகளையும் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். நன்கு முதிர்ச்சி அடையாத விதைகளை தண்ணீரில் மேல் மிதக்கும். விதைகளைப் பெரிய விரிப்பின் மேலோ அல்லது வெள்ளை நிறப் பாலித்தின் விருப்பு மேல் பரப்பி நன்கு சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் காயவைக்க வேண்டும். பின்பு விதையின் ஈரப்பதம் பழைய நிலைக்குத் திரும்பும் வரை அதனுடைய ஈரப்பதத்தைக் குறைத்து சேமிக்க வேண்டும். விதைகளை காயவைக்கும் போது 4-5 முறை நன்கு கிளறி விட வேண்டும். அவ்வாறு செய்வதால் சீரான முறையில் விதைகளின் முளைப்புத் திறனை பாதிக்காமல் சேகரிக்கலாம்.

விதை நேர்த்தி.

மூங்கில் விதைகளை 100 பிபிஎம் ஜிப்ரலிக் அமிலத்தில் சுமார் 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு நன்கு உலர்த்தி விதைத்தால் விதையின் வீரியம் மற்றும் முளைப்புத்திறன் சுமார் 30 சதம் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் மூங்கில் விதையுடன் அஸோஸ்பைரில்லம் நுண்ணூட்டக்கலவை ஒரு கிலோ விதைக்கு 50 கிராம் என்ற அளவில் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு விதை மூலம் பூசும் கலவையைக் கொண்டு விதை முலாம் செய்து அவற்றை சுமார் 16 மணி நேரம் இருட்டறையில் வைத்திருந்து விதைத்தால் விதையின் முளைப்புத்திறன் விதைமுலாம் பீசப்படாத விதையைக் காட்டிலும் சுமார் 21 சதம் அதிகரிதுக் காணப்படுவதோடு நாற்றங்காலில் நல்ல வளமான நாற்றுக்களைப் பெறலாம்.

விதை சேமிப்பு.

மூங்கில் விதைகளை சாதாரண அறை வெப்ப நிலையில் கால்சியம் குளோரைடு கரைசலில் சேமித்து வைத்தால் அதனுடைய மூளைப்பு மற்றும் வீரியம் பாதுகா க்கப்படும். மேலும் டை-சோடியம் ஹைடரஜன் பாஸ்பேட் (10-4 அ) அடர்த்தியுள்ள கரைசலில் ஊறவைத்து உலரவைப்பதைக் காட்டிலும் சிறந்த முறையாகும்.

பொதுவாக விதையின் முளைப்புத்திறன் ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும். எனவே, விதைகளின் முளைப்புத் திறனை 60 நாட்களுக்கு மேல் நீடிக்க மணல் நிறப்பப்பட்ட கோணிப் பைகளில் சேர்த்து வைக்க வேண்டும்.

மூங்கில் விதையை ஆஸ்டர்னேரியா, ஆஸ்பர்சில்லஸ் செர்க்கோஸ்போரா, பெனிசிலியம் மற்றும் சூபாமாப்சிஸ் போன்ற பூன்சான்கள் விதையைத் தாக்கும் வாய்ப்புள்ளது.. எனவே, விதையின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தற்போது ட்ரைகோடர்மாவிர்டி (4 கிராம், கிலோ) மற்றும் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் (10) கிராம், கிலோ) என்ற எதிர் உயிர் பூஞ்சானம் மற்றும் எதிர் உயிர் பாக்டீரியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செயவதனால் விதையின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப் படுத்தி நல்ல தரமான நாற்றுக்களைப் பெறலாம். பொதுவாக சேகரித்த மரவிதைகளை சில நாட்கறுக்குள் பயன் படுத்தாவிட்டால் அவற்றின் முளைப்புத்திறன் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, அதிகளவு தரமான மரவிதைகள் கிடைக்க விதைகளை மரத்திலிருந்து குறிப்பிட்ட காலத்தில் சேகரித்துப் பிரித்தெடுத்துச் சுத்தம் செய்து பாதுகாப்பான இடத்தில் தகுந்த முறையில் சேகரித்து வைத்தல் மிகவும் அவசியமாகும்.


------------------------------- (மூங்கில் தொடரும்)

No comments: