Saturday, December 20, 2008

விதையில்லா மூங்கில் சாகுபடி











விதையில்லா மூங்கில் சாகுபடி.

மூங்கிலில் இருந்து விதை சரிவர எல்லாக் காலங்களிலும் கிடைக்காததாலும், தரமான தாய்மூங்கிலை ஒத்த கன்றுகளை உற்பத்தி செய்வதற்கும், விதையில்லா மூங்கில் சாகுபடி முறை பயன் படுத்தப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளைக் கையாண்டு விதையில்லாமல் மூங்கிலை உறப்த்தி செய்யலாம்.

1. களிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.
2. பக்கக்கிளைகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.
3. வேருடன் கொண்ட களிகளைப் பயன்படுத்தல்.
4. பதியன் மூலம் மூங்கில் நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.
5. களிகளை அதற்றி நடும் முறை.
6. திசுமுறை வளர்ப்பு.

1. களிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வளர்ந்த களிகளை வெட்டி, பின் பக்க கிளைகளை அகற்றி மணற்பாங்கான பள்ளப் பாத்திகளில் வைத்து மூடி நீர் பாச்சுதல் வேண்டும். இதற்குப் போதிய நிழல் கொடுத்தல் வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் ஒவ்வொரு கணுவில் இருந்தும் வேர் தோன்றி புதிய தண்டுகள் தோன்றும். இதன் பிறகு, கணுவையும் நாம் வெட்டியெடுத்து, பாலித்தீன் பைகளில் நட்டு 3 அல்லது 4 மாதங்கள் வளர்த்த பிறகு நடவு வயலுக்கு எடுத்துச் செல்ல லாம். இவ்வாறு அல்லாமல் மூங்கில் களிகளை2 அல்லது 3 கணுக்கள் கொண்ட தண்டுகளாக வெட்டி இதில் 100 மில்லி 200ppmIBA என்ற வேர் ஊக்கியை நிரப்பி நாற்றங்காலில் நட்டு நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்.

2. பக்கக்கிளைகளைப் பயன் படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.

களிகளில் உள்ள பக்கக்கிளைகளை வெட்டி ஒரு கணு கொண்டுள்ள துண்டுகளாக மாற்றி, மேல்பாகம் மெழுகு கொண்டு பூசி, பாலித்தீன் பைகளில் கீழ்பாதியில் மண் மற்றும் 2; 1 என்ற விகிதத்தில் பாதியில் மணல் நிரப்பி மிஸ்ட் சேம்பரில் வைத்துப் பராமரித்து நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வளர்ந்த நாற்றினை வெளியே எடுத்து தற்காலிக நாழலில் வைத்து 2 மாதங்களுக்குப்பிறகு வெட்ட வெளியில் வைத்து வளர்ந்த 6 மாத கன்றுகளை வயலில் நடலாம்.

3. வேருடன் கொண்ட களிகளைப் பயன் படுத்துதல்.

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வளர்ந்த களிகளை அடிபாகத்திலிருந்து ஒன்று அல்லதுஇரண்டு கணுக்களை விட்டு வெட்டியெடுத்த பிறகு வேருடன் தோண்டி எடுக்க வேண்டும். இவ்வாறு தோண்டிய களிகளில்வேர் பாகத்தை 2% பெவிஸ்டின் கரைசலில் அரை மணி நேரம் ஊறவைத்து, பின் களிகளில் வெட்டுப் பட்ட மேல்பாகத்தில் போடோ பேஸ்ட் மூலம் மூடி மழைகாலங்களில் இதனை நடவு வயலில் நடலாம்.

4. பதியன் மூலம் மூங்கில் நாற்றுக்கள உற்பத்தி செய்யலாம்.

ஒராண்டு வளர்ந்த களிகள் அல்லது பக்கக்கிளைகளை வளைத்து மண்ணில் புதைத்து நீர் ஊற்ற வேண்டும். 3 அல்லது 4 வாரங்களில் வேர் மற்றும் தண்டுகள் கணுக்களில் தோன்றும். இவ்வாறு தோன்றிய பின் இவற்றை தாய் மரத்திலிருந்து வெட்டியெடுத்து ஒவ்வொரு கணுவினையும் வெட்டி பாலிதீன் பைகளில் நட்டு நாற்றுக்களை உற்பத்தி செய்து நடலாம்.

5. களிகளை அகற்றி நடுதல் முறை.

ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வளர்ந்த தரமான கன்றுகளை எடுத்து இவற்றில் உள்ள 4-6 களிகளைப் பிரித்து வேருடன் நட்டு நாற்றுக்கள் உற்பத்தி செய்து நடவு வயலில் நடலாம். இவ்வாறு நடவு செய்வதன் மூலம் தரமான தாய் கன்றுகளை நாற்றங்காலிலேயே பராமரித்து அதிக நாற்றுக்கள் உற்பத்தி செய்யலாம்.

6. திசுமுறை வளர்ப்பு.

மூங்கில் மரக்கன்றுகளைத் தரமான தாய் மூங்கில் மரத்தின் தண்டுகளின் நுனிப்பாகங்களைக் கொண்டு 4 முதல் 8 மாதங்களில் ஆயிரக்கணக்கான நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். இவ்வாறு தயாரிக்கப்படும் நாற்றுக்கள் மிகுந்த வீரியத்துடனும் நல்ல வளர்ச்சியுடனும் வளரும். மேலும் பூச்சி மற்றும் பூஞ்சான நோய்கள்தாக்காத கன்றாக இருக்கும் கன்றுகள் சிறியதாக இருப்பதால் எடுத்துச் செல்லும் செலவு குறையும்.

மேலே கூறப்பட்டுள்ள விதையில்லா மூங்கில் தயார் செய்யும் போது, தாய்மரத்தின் வயது தெருந்து
கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் தாய்மரம் பூத்தால் அதிலிருந்து தயாருக்கப்பட்ட நாற்றுக்களும் பூத்துவிடும்.

எனவே தரமான மூங்கில் நாற்றுக்களைத் தயாரித்து அதன் மூலம் வாளிப்பான மூங்கில் காடுகளை வளர்த்து அதிக லாபம் பெறுவதோடு வளமான வாழ்வினைப் பெறுவோம்.

(குறிப்பு- கோவை மாவட்டத்தில் மூங்கில் நாற்றுக்கள் கிடைக்குமிடம்- ஈடன் நர்ஸரி கார்டன்ஸ், தமிழ்நாடு ஆரசு உரிம எண்: 760/CBE/98
23 /15 கருபாயம்மாள் தோட்டம், வெள்ளிபாளையம் ரோடு, மேட்டுப்பாளையம்-641 301, போன் 04254 226493, ராஜரத்தினம் BSc., 94860 94670.)மற்றும் தஞ்சாவூர், காடையூர் திருச்சி ஆகிய ஊர்களிலும் கிடைக்கும்.

--------------------------------( மூங்கில் தொடரும் )

No comments: